*அன்னையின் சிறப்புகள் :*
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர்
(ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக்
குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன்
இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும்
இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு
வாய்ந்தவராக இருப்;பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த
சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய மனைவியாக இருப்பதற்கும் அல்லாஹ்
அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும் அன்னையவர்களின் உருவத்தை
பச்சைப் பட்டுத் துணியில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வானவர் தலைவர்
ஜிப்ரீல் (அலை) அவர்களால் காட்டப்பட்ட நற்பெயருக்கும் சொந்தக்காரவார்கள்.
இன்னும் இவரை நீங்கள் மணக்கவிருக்கின்றீர்கள், இன்னும் இவரே மறுமைநாளிலும்
உங்களுக்கு மனைவியாக இருக்கப் போகின்றவர் என்றும் அப்பொழுது இறைத்தூதர் (ஸல்)
அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நன்மாரயம் கூறினார்கள்.
மிகச் சிறந்த அறிவாளியாகவும், அதிக ஞாபகசக்தியும் பெற்றுத் திகழ்ந்த
அன்னையவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மிக நீண்ட காலங்கள்
வாழ்ந்திருந்ததன் காரணமாக, அதிகமான நபிமொழிகளையும் நமக்கு அறிவிப்புச்
செய்திருக்கின்றார்கள். இஸ்லாமிய பிக்ஹுச் சட்டங்கள், ஷரீஅத் சட்டங்கள் இன்னும்
இஸ்லாமியச் சட்டங்களின் பல கிளைகளிலும் அன்னையவர்களுக்கு இருந்த தெளிவான
ஞானத்தின் மூலமாகவும், அதன் விளக்கங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு
மனைவியாக வாழ்க்கைப்பட்டிருந்ததன் காரணமாக அவர்களுடன் அதிக நேரங்கள்
இணைந்திருந்ததன் காரணமாக அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவைகள், இன்னும் நேர்மை,
நாணயம், நம்பிக்கை ஆகியவற்றில் மிகச் சிறந்த விளங்கிய அன்னையவர்கள், அவர்கள்
வாழ்ந்த கால கட்டத்தில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தார்கள் என்றால்
அதில் மிகையில்லை.
அன்னையவர்கள் மிகவும் இளகிய மனதுடையவர்கள். அவர்களது வீட்டிற்குள் நுழைந்த
எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை. வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை)
அவர்கள் மூலமாக இறைவனின் ஸலாமைப் பெற்றுக் கொண்ட நற்பேறு பெற்றவர்கள். இன்னும்
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மலரிதழ்களின் மூலமாக சொர்க்கம் உண்டென
நன்மாராயத்தைப் பெற்றுக் கொண்டவர்களுமாவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்)
அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் தான் கழிந்தது. அதிலும்,
அன்னையவர்கள் வாழ்ந்த அந்த வீடு தான் இறுதித் தூதர் (ஸல்) அவர்களின்
மண்ணறையாகவும், நெடுதுயில் கொள்ளும் இடமாகவும் ஆனது. அன்னையவர்கள் வாழ்ந்த
காலத்திலும் சரி, இப்பொழுதும் எப்பொழுதும் அவர்கள் வாழ்ந்த அந்த இல்லம்
வானவர்களால் எப்பொழுதும் சூழப்பட்ட நிலையிலும், இறைவனின் சாந்தியும்,
சமாதானமும், அருளும் இறங்கிக் கொண்டிருக்கக் கூடிய, புகலிடமான மதீனாவாகவும்
இருந்து கொண்டிருக்கின்றது.
இந்த உலகத்தில் தோன்றிய, இன்னும் தோன்றவிருக்கின்ற பெண்களில் மர்யம் பின்த்
இம்ரான் (அலை) அவர்களைத் தவிர, மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சிறந்த
அருட்கொடைகளுக்கு உரித்தானவராகத் திகழ்கின்றார்கள்.
வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டில்
வைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கனவில் அன்னையவர்களின் உருவத்தைக்
காண்பித்து, இவர் தான் இந்த உலகிலும், மறு உலகிலும் உங்களுக்கு மனைவியாக
வாய்க்கப் போகின்ற பெண்மணி என்ற நன்மாரயத்தைப் பெற்றுக் கொண்டவர்களும்,
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களில் கன்னிப் பெண்ணாக இருந்த
நிலையில் மணமுடிக்கப்பட்டவரும்,
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் கழிந்தது.
இன்னும் அன்னையவர்கள் வசித்த இல்லத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
அடக்கமும் செய்யப்பட்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அன்னையவர்களும் ஒன்றாக இருந்த பல சமயங்களில்
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக வஹி
அருளப்பட்ட நற்பெயருக்கு உரித்தானவரும்,
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழர், உற்ற நண்பர் அபுபக்கர் சித்தீக்
(ரழி) அவர்களின் மகளும்,
அன்னையவர்களின் மீது களங்கம் சுமத்தப்பட்ட பொழுது, அத்தகைய களங்கத்திற்கு
சொந்தக்காரரல்ல என்று இறைவனே சாட்சியமளித்து திருமறை வசனத்தை இறங்கிய
நற்பேற்றுக்கும் உரித்தானவரும்,
முஸ்லிமாகவே பிறந்து, முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டவரும், மிகவும் பரிசுத்தமான
சூழ்நிலையில் வார்த்தெடுக்கப்பட்டவரும்,
வல்லோனானாம் அல்லாஹ் தனது மன்னிப்பையும், பேரரருட் கொடைகளையும் அன்னைக்கு வழங்க
இருப்பதாக வாக்குறுதி அளித்த அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொண்டவர்களாவார்கள்.
*பிறப்பும் வளர்ப்பும், நினைவாற்றல்*
ஆயிஷா (ரழி) அவர்களின் தாய் வழியும், தந்தை வழியும் மக்காவின் மிகச் சிறந்த
பிரபலமான நன்கறியப்பட்ட குலமாக இருந்த காரணத்தால், மக்காவின் செழிப்பு மிக்க
குடும்பத்துப் பெண்ணாகப் பிறந்தார்கள். இவர்களது தாயார் உம்மு ருமான் (ரழி),
தந்தையோ மிகப் பிரபலமான நபித்தோழரும், முதல் கலீபாவுமான அபுபக்கர் (ரழி)
அவர்களாவார்கள். உம்மு ருமான் (ரழி) அவர்களது முதல் கணவரது பெயர் அப்துல்லா
அஸ்தி, இவருக்குப் பிறந்த மகனின் பெயர் அப்துர் ரஹ்மான். உம்மு ருமானின் முதல்
கணவர் இறந்ததன் பின்னர் அபுபக்கர் (ரழி) அவர்கள் இவரை மணந்து கொண்டார்கள்.
இவருக்கும் அபுபக்கர் (ரழி) அவர்களுக்கும் பிறந்த செல்வம் தான் ஆயிஷா (ரழி)
ஆவார்கள். கி.பி. 614 ஆம் ஆண்டு ஆயிஷா (ரழி) அவர்கள் பிறந்தார்கள். இவரது
தந்தையாரான அபுபக்கர் (ரழி) அவர்களைப் பற்றி திருமறைக் குர்ஆனில் இறைவன்
மிகவும் போற்றி சிலாகித்துக் கூறியுள்ளான். அபுபக்கர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை
முதன் முதலில் ஏற்றுக் கொண்ட நற்பேற்றைப் பெற்றவரும், இன்னும் மிகச் சிறந்த
இறையச்சம் உடையவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக்காலத்தில்,
மக்கத்துக் குறைஷிகள் சொல்லொண்ணா துயரங்களைத் தந்த போது, அந்த இக்கட்டான
தருணங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பக்க பலமாக இருந்த இறைநம்பிக்கையை
வெளிப்படுத்தியவரும், இன்னும் தன்னுடைய உயிரை விட தூதர் (ஸல்) அவர்களின் உயிரை
மதித்தவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழருமாக ஆயிஷா (ரழி) அவர்களின்
தந்தை அபுபக்கர் (ரழி) அவர்கள் இருந்த காரணத்தினால், அவரது புகழுக்கு ஏற்றவாறு
ஆயிஷா (ரழி) அவர்களின் புகழும் மிகவும் கீர்த்தி மிக்கதுதான். இன்னும் ஆயிஷா
(ரழி) அவர்களின் தந்தை அ